Jun 7, 2010

எமது சமூகத்தின் விடியலை நோக்கி…


எமது சமூகத்தின் விடியலை நோக்கி…

எனது முதலாவது புலம்பலாக பள்ளிவாசல்கள் தொடர்பிலான பதிவினை நான் தெரிவுசெய்தேன். இப்பதிவினை வாசிக்கும்போதே உங்களுக்கு நான் ஏன் இத்தலைப்பினை தேர்வுசெய்தேன் என புரிஞ்சுகொள்வீங்க. நன்றி….

நபி (ஸல்) அவர்களும்> அவர்களது தோழர்களும் மக்காவிலிருந்து இடம்பெயர்ந்து மதீனாவில் குடியேறியதும் தமது ஆன்மீகப் பயணத்தின் வெற்றிக்கும்> சமூக தேவைகளுக்குமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் முதன்முதலாக ஒரு பள்ளிவாசலையே நிர்மாணித்தார்கள். இதற்கு மஸ்ஜிதுன் நபவி என பெயர் சூட்டினார்கள். அன்றைய சமூகத்தினரை நபியவர்கள் இப்பள்ளிவாசலை மையமாகக்கொண்டே சிறந்த முறையில் நெறிப்படுத்தினார்கள்.
அராபிய தீபகற்பத்திலிருந்து வியாபித்த முஸ்லிம்களும் தாம் குடியேறும் இடங்களில் தமது சமூகத்தினை கட்டியெழுப்புவதற்காக பள்ளிவாசல்களையே முதலாவதாக நிர்மாணித்தார்கள். ஏக இறைவனை துதிப்பதற்கும்> சமூக விடயங்களுக்கும் அவர்கள் பள்ளிவாசலகளையே நாடிச்சென்றனர்.
இவ்வாறு அரேபியர்கள் இலங்கைக்கும் வர்த்தக நோக்கில் வருகைதந்தனர். இவர்கள் இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் பேருவளை மருதானையிலே முதன்முதலில் கால்பதித்தனர். மேலும் இவர்கள் தமது சம> சமூகத்தேவைகளுக்காக மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாசலை நிர்மாணித்தனர். இதுவே இலங்கையின் முதலாவது முஸ்லிம் பள்ளிவாசலாகவும் வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளது
காலப்போக்கில் பேருவளையிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தனர். தமது ஆன்மீக> சமூக தேவைகளுக்காக தாம் வாழும் பிரதேசங்களில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தனர். இப்பள்ளிவாசல்களை சிறந்த முறையில் முகாமை செய்வதற்கு நம்பிக்கை பொறுப்புச்சபை ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிவாசல்களில் அன்றுமுதல் குர்ஆன் மத்ரஸாக்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மாஷாஅல்லாஹ் இன்று இலங்கையில் சுமார் 2500 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. என்றாலும் ஏராளமான பள்ளிவாசல்கள் தொழுகைக்கான அழைப்பினை விடுத்து இறைவனை துதிக்கக்கூடிய இறையில்லமாக மட்டுமே காணப்படுகின்றது.
இறைவனை துதிப்பதற்கும்> எமது சமூகத்தை கட்டியெழுப்புவதற்குமே பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதனை நாம் மறந்துவிட்டோமா? அல்லது சீரழிந்துள்ள எமது சமூகத்தை சிந்திப்பதற்குத்தான் நாம் மறந்துவிட்டோமா?
ஒரு கல்விக்கூடத்தினை> ஒரு வாசிகசாலையினை> ஒரு மருத்துவ நிலையத்தினை> ஒரு நீதிமன்றத்தினை> ஒரு ஸகாத் குழுவினை> ஒரு கலாசார நிலையத்தினை> ஒரு இளைஞர் மன்றத்தினை ஏன் எமது பள்ளிவாசல் நிர்வாகத்தின்கீழ் நாம் அமைக்க மறந்துவிட்டோம்?
இன்ஷா அல்லாஹ்…
சிந்திப்போம்…
செயற்படுவோம்….
எமது சமூகத்தின் விடியலை நோக்கி….