Oct 3, 2012

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!


இன்று சர்வதேச ரீதியில் சிறியவர் முதல் முதியவர் வரை சகல தரப்பினரும் 4வது T20 உலக கிண்ண கிரிக்கட் கோப்பையினை யார் சுவீகரிக்கப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். முதலாம், இரண்டாம் சுற்றுக்கள் முடிவடைந்து பரபரப்பான அரையிறுதியை எட்டியிருக்கின்ற இவ்வேளையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அரையிறுதிப்போட்டிக்கு முஸ்லிம், முஸ்லிமல்லாத நாடுகள் தெரிவாகியிருக்கின்றன. இப்போட்டிகளின்போது கிடைக்கப்பெறும் முடிவுகளை இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நாமும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு  ஏற்றுக்கொள்ளவேண்டும். மாறாக ஏராளமான எமது முஸ்லிமகள் இஸ்லாமிய நாடுகளுக்கு தமது ஆதரவை வழங்கி எமது தாய்நாட்டிற்கு சேறுப+சும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றமை கவலைக்குரியவிடயமே. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பலர் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை வெற்றிகொண்டதை இம்மண்ணிலேயே கொண்டாடி ஏனைய மக்களது உள்ளங்களை புண்படுத்திய கசப்பான வரலாற்றினை யாரும் மறுக்கமுடியாது.
எனவே மூன்று தசாப்தகால யுத்தத்தை இல்லாதொழித்து இனங்களுக்கிடையே ஒற்றுமையினை கட்டியெழுப்பவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த காலங்களில் நாம் மறந்துசெயற்பட்டதன் விளைவாக பல குரோதங்கள் இன்றும் எம்மத்தியில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. எமது அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும்  பல்லினங்களுக்கிடையே சகவாழ்வினை தொடர்ந்தும் பேணுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரோடு சேர்ந்து நாம் இலங்கையர் என்ற உணர்வோடு எமது தாய்நாட்டிற்கு ஆதரவினை தெரிவித்தல்வேண்டும். எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுபவர்களாக நாம் இருக்கக்கூடாது.
ஆகையால் நாமும் இலங்கையர்கள் என்பதை நினைவில்கொண்டு நாட்டுப்பற்றுடன் போட்டி முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை சுவீகரித்த எமது இலங்கை அணி இம்முறை T20 உலகக்கிண்ணத்தை தனதாக்கி தேசத்திற்கு பெருமை சேர்ப்பதற்கு எமது ஆதரவினை தெரிவிப்போம்.