Mar 7, 2012

அறிவு நிறைந்த ஆசிரியர்களே உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்!




அறிவு நிறைந்த ஆசிரியர்களே
உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்!

கையில் வண்ண வண்ண பலூன்களோடு
எனது வகுப்பின் சக மாணவர்களை
ஆசிரியர்கள் கலைவிழாவிற்காக
தயார்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்
என்னுள்ளும் ஆசை பொங்கியெழுகின்றது
நானும் மேடையேறி பாடவேண்டுமென்று…

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும்,
உறவினர்களுக்குமாம் அந்த வரம்.
வரத்தினை பெற்றவர்களில்
சிலபேர்தான்
வாயைத்திறக்கின்றார்கள்.
மற்றவர்களெல்லாம்
மேடையில் ஊமைகளாய்…
எனது சின்ன மனதில் இது
நீங்காத வடுவினை விதைக்கின்றது.
தாய் என்ற வகையில்
அவர்களது பிள்ளைகளை
மேடையேற்றிபார்க்கவேண்டுமென்ற ஆசை
ஆசிரியைகளுக்கு இருப்பது தவறல்ல…..
இதே ஆசை என் பாமரத்தாய்க்கும் இருப்பது நியாயம்தானே…
எல்லோரும் மேடையேறும்போது
என்னையும் ஏறும்படிகூறி
வீட்டில் என் பாமரத்தாய்
என்னை பயிற்றுவித்தாள்.
கலைவிழாவில்
நானும் மேடையேறினேன்….
உனது பெயர்கூறப்படவில்லையே
ஒரு ஆசிரியை என்னை
மேடையிலிருந்து இறக்க
என் சின்ன மனது செத்துப்போனது…
காலங்கள் கடந்துசெல்ல
தொடர்ந்து சந்தித்த ஆசிரியர்கள்
எனக்கு தாயாகி
என்னை வளர்த்தெடுக்க
இன்று
நான் ஓரு தயாரிப்பாளனாய்
வளர்ந்திருக்கின்றேன்.
பெரிய சிகரங்களை
தொட்டுவிடாவிட்டாலும்
ஏதோ சமூகத்தில்
ஒரு பிரஜையாய்
மாறியிருக்கின்றேன்.

இன்றும் என் நெஞ்சை
புண்படுத்திக்கொண்டிருக்கும்
அந்த வடுக்கள்
என்னிடம் எப்போதும்
ஒன்றைச்சொல்லிக் கொண்டேயிருக்கின்றது.
அறிவு நிறைந்த ஆசிரியர்களே
உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்!
என் பிஞ்சு நெஞ்சில் நஞ்சூட்டிய
ஆசிரியர்களைப்போல் அல்லாமல்
எல்லோரையும்
சரியாக இனங்கண்டு
மாணவச்சிற்பங்களை
சமூகத்திற்காய் செதுக்கியெடுங்கள்.
வீட்டில் உங்கள் பிள்ளை
உங்கள் பிள்ளையாகவே இருக்கட்டும்
பாடசாலையில் எல்லோரும்
உங்கள் மாணவர்களல்லவா…

By: ரூமி ஹாரிஸ்