Jul 18, 2011

குண்டக்க மண்டக்க....

அதிகமான வேளைப்பளு காரணமாக நீண்ட நாட்களாக எனது புலம்பல்கள் பதிவினை எட்டிப்பார்ப்பதற்குக்கூட நேரம் கிட்டவில்லை நண்பர்களே. இன்று ஏதாவது எழுதியாக வேண்டுமென்ற வெறியோடு சமூகத்தில் காணப்படுகின்ற ஒரு ப(பு)ண்பாட்டினை எழுத நான் முடிவுசெய்துவிட்டேன்.

குண்டக்க மண்டக்க

குண்டக்க மண்டக்க - இன்றைய சமூகத்தில் வேகமாக வேறூன்றிவருகின்ற ஒரு கலாசாரமாகும். எங்குபோனாலும், யாரைப்பபார்த்தாலும் குதர்க்கமாகவும், அடுத்தவரை வெட்டியும் பேசுவதற்கே அனைவரும் இசைவாக்கமடைந்திருக்கின்றனர். கிராமத்திலுள்ள ஆலமரத்தடி சந்தியாக இருக்கட்டும், கடைத்தெருக்களாக இருக்கட்டும், நகரங்களிலுள்ள ஆடம்பர உணவு விடுதிகளாக இருக்கட்டும், மேடைப்பேச்சுகளாக இருக்கட்டும் இன்று ஒவ்வொருவரும் கதைத்துக்கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் இடையில் குண்டக்க மண்டக்கவாக பேசி அனைவரையும் சிரிக்கவைத்துவிட்டு கதையை திசைதிருப்பிடுவார்கள். அந்த கதையை ஆரம்பித்தவர்pன் முகத்தை பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும். இவரும் சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்து தனது வயித்தெரிச்சலை தீhத்துக்கொள்வார். இவ்வாறு மாறிமாறி ஆளக்கு ஆள் குண்டக்க மண்டக்க பேசி காலத்தையும் நேரத்தையும் போக்கிவருகின்றனர்.

இது இன்று எந்தளவிற்கு சமூகத்தில் ஊடுருவியுள்ளதென்றால் சில சுட்டியான குழந்தைகள் வீட்டிற்குவரும் விருந்தாளிகளை இவ்வாறு பேசியே முகம்சுழிக்கவைக்கின்றனர். இதன்போது அருகிலுள்ள பெற்றோர்களும், உறவினர்களும் தலைகுனிய வேண்டிய நிலை. அதன்பிறகு விருந்தினரின் தவிப்புபற்றி நான் சொல்லி நீங்கள் புரியத்தேவையில்லை என நினைக்கிறேன். இவ்வாறன அனுபவங்கள் என்னைப்போலவே உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு சுட்டியாக பேசும் குழந்தைகள் சிறுபிள்ளைத்தனமாக சூழ்நிலை தெரியாமல் பேசிவிடுகின்றனர். இந்த பிஞ்சுகளும் சுற்றியுள்ள பெரியவர்களைப்பார்த்தே இந்த பண்பாடுகளை தொட்டுக்கொள்கின்றனர்.

இந்த கலாசாரம் இன்று பாமரர்கள் முதல் பண்டிதர்கள்வரை ஒரு (கொ)கலையாக வளர்ந்துவருகின்றது. இது நான்குபேருக்கிடையில், ஒரு சபையில், கலகலப்பை ஏற்படுத்தினாலும் பின்பு கைகலப்பக்களையும் ஏற்படுத்திவருகின்றதென்பதை யாராலும் மறுக்கமுடியாது. இது ஒவ்வொரு குடும்பத்தினையும், குழுக்களினையும், பண்பாடற்ற, விழுமியங்களற்ற சமூகமாக மாற்றிவருவது மிகவும் கவலைக்குரியவிடயமாகும். நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கும்போது கலகலப்பாக, நகைச்சுவையாக பேசத்தான் வேண்டும். நகைச்சுவையாக பேசுபவர்களை எல்லோரும் விரும்புவார்கள். அதற்காக எப்போதுமே குதர்க்கமாகபேசுவது விரும்பத்தக்கதல்ல. இதன்மூலம் ஏனையவர்கள் சிரித்தாலும் எங்களை குறைத்துமதிப்பிடுவாகள் என்பதுதான் உண்மை.

இன்றைய சினிமாக்களில் நகைச்சுவை என்ற பெயரில் பலர் இந்த சேவையை செய்துவருகின்றனர். குறிப்பாக புதிதாக சினிமாத்துறையில் இணைந்துள்ள கதாநாயகர்களும், நகைச்சுவை நடிகர்களும் இத்துறையில் கைதேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். மேலும் சில இளசுகளையும், சிறுசுகளையும் இந்த குண்டக்க மண்டக்கவிற்காகவே படங்களில் இணைத்துக்கொள்கின்றனர். அதேபோல தொலைக்காட்சிகளில் பேச்சாற்றல்களை வளர்ப்பதற்கும், இவ்வாறான கண்மூடித்தனமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றிவருகின்றனர். நகைச்சுவை மிகுந்ததாகவும், சிரிப்பபூட்டும் வகையிலும் இந்த நிகழ்ச்சிகள் இருந்தாலும் அநாகரிகமான கலாசாரத்தினை இவை தோற்றுவிக்கன்றன என்பதுதான் ஆதங்கம். இதற்கு மாற்றமாக வேறுவகையில் நகைச்சுவை நிகழச்சிகளை அரங்கேற்றலாமல்லவா. எனக்கு தெரிந்த வகையில் இவைகள்தான் இந்த குண்டக்க மண்டக்க கலாசாரத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்குவகித்துள்ளதென நான் நினைக்கின்றேன்.
முக்கியமாக இளையவர்கள் இந்ததுறையில் தம்மை வளர்த்துக்கொள்வதில் அளாதியான ஈடுபாட்டினை காட்டிவருகின்றார்கள். குறிப்பாக இன்றைய காலத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இந்த டாச்சர் நிறையவே இருக்குமென நினை;க்கின்றேன். சில மாணவர்கள் பாடத்தை கவனிக்கின்றார்களோ இல்லையோ ஆசிரியரின் விரிவுரையினை நன்றாக அவதானித்து இடைநடுவிலே குண்டக்க மண்டக்கவாகவே கேள்விகளை, சந்தேகங்களை கேட்பார்கள். ஏனைய மாணவர்கள் சிரிக்க ஆசிரியருக்கும் என்னசெய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போவார். இவ்வாறு இந்த குண்டக்க மண்டக்க கலாசாரம் இன்று வியாபகம் அடைந்து ஒவ்வொருவரையும் குட்டிச்சுவராக்கிவருகின்றது.
இந்த கலாசாரத்தின் விளைவு ஒன்றாக கூடி கதைத்த எத்தனையோ பேர் இன்று எதிரெதிரே கண்டாலும் பேசிக்கொவதில்லை. பேசினாலும் ஏடா கூடமாக, எசகு பிசகாக, எக்குத்தப்பாக பேசி குரோதங்களை தொடர்ந்தும் வளர்த்துக்கொண்டிருக்கின்ற துர்ப்பாக்கிய நிலையே தொடர்கின்றது. எனவே நாம் பேசும்போது கலகலப்பாக பேசுகின்ற அதேவேளை ஏனையவர்களின் மனம் புண்படாமல் அவதானமாக பேசவேண்டும்.
கொட்டிய வார்த்தகளை கோடி கொடுத்தாலும் அள்ளமுடியாதல்லாவா..

“அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப்பெறின்.”
(திருக்குறள்)

அஹம்மத் ரூமி